Olirum natchathiram - Ajith Kumar - Tamil
.
.
ஒளிரும் நட்சத்திரம்: அஜித்
English translation
1.அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித்.
2.சென்னைத் தமிழரான சுப்ரமணியம் – கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட மோகினி தம்பதியின் இரண்டாவது மகனாக மே-1-ம் தேதி 1971-ல் ஹைதராபாத்தில் பிறந்தவர் அஜித் குமார். சென்னை எழும்பூரில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தார். படிப்பின் மீது ஆர்வமில்லாத நிலையில், பள்ளியில் தேசிய மாணவர் படை, கிரிக்கெட் போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். அப்போது அஜித் அப்பாவின் நண்பர்களில் ஒருவரான செண்பகராமன் இயக்கிய ‘என் வீடு என் கணவர்’(1990) என்ற படத்தில் (சுரேஷ் – நதியா நடித்தது) இடம்பெற்ற ‘என் கண்மணி’ என்ற பாடல் காட்சியில் பள்ளி மாணவராகத் தோன்றினார் அஜித். சினிமா கேமரா முன்பு அவர் நின்றது அதுவே முதல்முறை.
3.அஜித்தின் அண்ணனோ (அனூப் குமார்), அவருடைய தம்பியோ(அணில் குமார்) தொட விரும்பாத அப்பாவின் பைக்கைப் பள்ளி நாட்களில் துணிவுடன் எடுத்து ஓட்டுவார் அஜித். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்காக ஒரு வருடம் பயிற்சி பெற்று, டிப்ளமோ பெற்றார். அப்போது பைக் பந்தயம் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. இந்த நேரத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கே நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அஜித், கிடைத்த அனுபவத்துடன் ‘டெக்ஸ்டைல் புராசஸிங்’ துறையில் சொந்தமாகத் தொழில் தொடங்கினார். அதில் அவருக்கு நஷ்டமே மிஞ்சியது. அப்போது மாடலிங் வாய்ப்புகள் கை கொடுத்தன. ‘மியாமி குஷன்’ காலணி உள்ளிட்ட சில விளம்பரங்களில் நடித்தார். இந்த நேரத்தில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான டி.ஐ. டையமண்ட் செயின் நிறுவனம், தனது கார்ப்பரேட் குறும்படத்துக்கு ஒரு இளம் பைக் பந்தய வீரரைத் தேடியது. மாடல் ஒருங்கிணைப்பாளர் மூலம் அந்த வாய்ப்பு அஜித்துக்குக் கிடைத்தது. பைக் பந்தய வீரராக அந்தப் படத்தில் நடித்தார் அஜித். இந்தக் குறும்படம் காரணமாக ‘பிரேம புஸ்தகம்’(1993) என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தேர்வுசெய்யப்பட்டார். இரண்டாவதாக அஜித் ஒப்புக்கொண்ட ‘அமராவதி’(1993) அவரது முதல் தமிழ்ப் படமானது.
4.‘அமராவதி’ படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புது மலரே...’ பாடல் காட்சியை ஊட்டியில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அதே லொக்கேஷனுக்கு மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படக்குழு வந்து முகாமிட்டது. மணிரத்னம், பிரசாந்த், கதாநாயகி ஹீரா உள்ளிட்ட பிரபலங்களைக் கண்டதும் அஜித்தின் படக்குழுவில் இருந்தவர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அங்கே மொத்தமாகச் சென்றுவிட, அஜித் மட்டும் போகவில்லை. அப்போது அஜித்தை விட்டு விலகாமல் அருகில் அமர்ந்திருந்தார் ஒருவர். இன்றுவரை அஜித்தின் மேனேஜராகவும் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துவரும் அவர், சுரேஷ் சந்திரா.
5.அஜித்தின் தமிழ் அறிமுகப் படத்தைத் தொடர்ந்து, ஐந்துக்கும் அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் ‘அமராவதி’ படத்துக்குப்பின் பைக் பந்தய விபத்தில் சிக்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். உழைப்பை நம்புபவராக இருந்தாலும் இந்த விபத்து, ‘நேரம், அதிர்ஷ்டம், தலைவிதி’ ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவராக அஜித்தை மாற்றியது.
6.அஜித்தின் முதல் வெற்றிப் படம் ‘ஆசை’. அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து, அவரைக் காவிய நாயகன் ஆக்கியது ‘காதல் கோட்டை’. மூன்று தேசிய விருதுகளுடன் 365 நாட்கள் ஓடிய ‘காதல் கோட்டை’யின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டினார் அஜித். காதல் கதைகளில் மட்டும்தான் அஜித் நடிப்பார் என்பதை, ‘வாலி’யும் ‘அமர்க்கள’மும் மாற்றின. ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது ஷாலினியுடன் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ முறைகளில் ஷாலினியை மணந்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு காதல் கிசுகிசுக்களில் சிக்காத நடிகராகவும், பேட்மிண்டன் விளையாட்டில் மனைவியை ஊக்குவிக்கும் அன்பான கணவராக இருக்கிறார். ‘அமர்க்களம்’ படத்துக்குப் பின் அடுத்தடுத்துப் பல வெற்றிகள் அமைந்தாலும் ‘ரெட்’ படத்துக்குப் பிறகு ‘தல’ என்று அவருடைய ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். பாக்ஸ் ஆபீஸிலோ ‘ஓபனிங் ஸ்டார்’ என்று பாராட்டத் தொடங்கினார்கள். ‘வரலாறு’ படத்தில் பெண் தன்மை இழையோடிய நடனக் கலைஞர் கதாபாத்திரத்திலும், ‘வில்லன்’ படத்தில் சில நொடிகளில் முகபாவங்களை மாற்றும் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடித்தது, அஜித்துக்கான வெகுஜன ரசிகர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தியது.
7.“எனக்கு கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம். அவரவர் அம்மா, அப்பாவைக் கவனியுங்கள்” என்பது தன் ரசிகர்களுக்கு அஜித்தின் கண்டிப்பான அறிவுரை. ஒரு கட்டத்தில் தனது ரசிகர் மன்றங்களை முற்றாகக் கலைத்த துணிச்சல் மிக்க இந்திய நடிகர் இவர் மட்டுமே. ‘அஜித் ரசிகர்’ என்ற அடையாளத்துடன் எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறில் இறங்குபவர்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று சட்டரீதியாக அறிவித்திருக்கும் முதல் நடிகரும் இவரே. அஜித் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகு அவரது படங்களின் வசூல் இரண்டு மடங்காக உயர்ந்தது. “நன்றாக இருந்தால் மட்டும் என் படத்தைப் பாருங்கள். மற்ற நடிகர்களின் படங்களையும் பாருங்கள்” என்று பரிந்துரைக்கும் அஜித், “எனது தொழில் நடிப்பதுடன் முடிந்துவிடுகிறது” எனக் கூறித் தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதை நிறுத்தி விட்டவர்.
8.தன்னிடம் நீண்ட காலமாகப் பணியாற்றிவரும் ‘டச் அப்’ உதவியாளர் தொடங்கி பலருக்கும் வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார். தான் செய்யும் உதவிகள் வெளியே தெரியக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பவர் அஜித். தன் பெற்றோரின் பெயரில் ‘மோகினி- மணி’ அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் உதவிகள் தேவைப்படும் கையறுநிலையில் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறார். தனது முன்னாள் மேனேஜருக்கு ஊதியம் வாங்காமல் படம் நடித்துக்கொடுத்திருக்கிறார்.
9.எந்தப் பின்புலமும் இல்லாமல், சினிமாவில் தனித்து நின்று வெற்றிபெற்றிருக்கும் அஜித், தன் மைத்துனர் ரிச்சர்ட், மைத்துனி ஷாம்லி ஆகிய இரண்டு பேருக்கும் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத நடிகராகவும் இருக்கிறார்.
10.“எங்களை வற்புறுத்தி ஏன் விழாக்களுக்கு அழைக்கிறீர்கள்?” என்று முதல்வர் மு.கருணாநிதி முன்னிலையில் துணிச்சலாக கேட்ட அஜித், ‘ஃபார்முலா டூ’ கார் பந்தயங்களில் கலந்துகொண்டதன் மூலம் நிஜத்திலும் கதாநாயகனாக வலம் வருகிறார். அஜித்துக்குப் பல பொழுதுபோக்குகள் இருந்தாலும் தனது கேமராவில் மனைவி, குழந்தைகளைப் படமெடுத்துக்கொண்டேயிருப்பவரும், தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களைப் படமெடுக்கத் துடிப்பவருமான அஜித், தன்னுள்ளிருக்கும் ‘ஒளிப்படக் கலைஞரை’ப் பெரிதும் நேசிப்பவர்.
தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்
நன்றி : தி இந்து ~25 Aug 2017
Compiler
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments